ரச்சனா வேலாயுதம்
பள்ளி விடுமுறையில் சிறுவர்களுக்கு பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக்கொடுத்து கலாசாரத் தகவல்களை எடுத்துக்கூற 'டைம் டிராவல் டாட்ஸ்' என்ற நிகழ்ச்சி இம்மாதம் மூன்றாம் தேதி நடந்தது.
'ஐஎம்யூத்' என்ற இளையர் சமூக அமைப்பு ஒன்பது வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது.
அரேபிய கைவண்ணத்திலான எழுத்து முறை, ஐந்து கற்கள், சப்தே, கோலி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் அதன் வரலாறும் வந்திருந்த 25 குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
அல் அப்ரார் மசூதி, கஃபூர் மசூதி, நாகூர் மரபுடைமை நிலையம் போன்ற இடங்களில் செயல்பட்டு வரும் சிங்கப்பூர் 'மாமா' கடைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூற சிறுவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் அக்கடைகளில் பொருள்களை வாங்கும் அனுபவம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்த்தளத்தில் 'மாமா' கடை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் சிறுவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போலி பணத்தைக் கொண்டு பிடித்தமான பொருள்களை வாங்கினர். பாரம்பரிய நொறுக்குத் தின்பண்டங்களையும் சிறுவர்கள் சுவைத்தார்கள்.
"அரேபிய கலாசாரம், நமது இந்திய முஸ்லிம் கலாசாரம் போன்றவற்றை சிறுவர்களுக்குப் புகுத்த இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக ஏற்பாடு செய்தோம். அடுத்த முறை பெரிய அளவில் நடத்துவதற்கு இந்நிகழ்ச்சி எங்களுக்கு தன்னம்பிக்கை அளித்து உள்ளது," என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான நூர் சாரா முஹம்மது ரஃபி கூறினார்.
குவிந்து கிடக்கும் வண்ணக் குச்சிகளை அலுங்காமல் குலுங்காமல் கவனமாகப் பிரித்தெடுக்கும் சிறுவன்.
'ஐஎம் யூத்' என்ற இளையர் சமூக அமைப்பு இளஞ்சிறார்களுக்காக ஏற்பாடு செய்து நடத்திய 'டைம் டிராவல் டாட்ஸ்' நிகழ்வில் கலந்துகொண்டு தங்கள் ஓவியத் திறனை வெளிக்காட்டிய மாணவர்கள்.
இடது படம்: குறுக்கெழுத்துப் புதிரைச் செய்யும் பிள்ளைகள்.
வலது படம்:
கிராமஃபோன் குறித்து விளக்கம் அளிக்கும் இளையர்.
படங்கள்: 'ஐஎம் யூத்' அமைப்பு

