ராட்சத பீட்ரூட்: ஒற்றுமையே பலம்

ராட்சத பீட்ரூட்: ஒற்றுமையே பலம்

2 mins read
66083db2-f235-4ea5-83bd-80a00e78ff53
-

ஓர் எழில் கொஞ்சும் பகுதியில் ஒரு விவசாயி தன் மனைவி, பிள்ளைகள், செல்லப்பிராணிகளுடன் வாழ்ந்து வந்தார். அவர் தன் தோட்டத்தில் பீட்ரூட் காய்கறியைப் பயிர் செய்து வந்தார்.

நாளடைவில் பீட்ரூட் பயிர் நன்றாக செழித்து வளரத் தொடங்கியது.

ஒரு நாள் அவர் பீட்ரூட் செடிகளைப் பார்த்துக்கொண்டே சென்றபோது, ஒரு பீட்ரூட் மட்டும் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதைப் பார்த்தார்.

"என்னடா இது, இந்த பீட்ரூட் மட்டும் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளது," என அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.

"நமது குடும்பம்தான் போதிய பணம் இல்லாமல் சிரமப்படுகிறதே. இந்தப் பீட்ரூட்டைப் பறித்துச் சென்று சந்தையில் விற்றால் நிறைய பணம் கிடைக்கும். நமது வறுமையும் ஓரளவு தீர்ந்துவிடும்," என்று கணக்குப் போட்டபடி பீட்ருட்டைப் பிடுங்க நினைத்தார். ஆனால், அவரால் அதனைப் பிடுங்கி எடுக்க முடியவில்லை.

ஏனெனில், அந்த அளவுக்கு அது பெரிதாக இருந்தது.

உடனே ஒரு பெரிய கயிற்றைக் கட்டி பீட்ரூட்டைப் பிடுங்கினார்.

அதுவும் பயன் தரவில்லை. உடனே அவர் தன் மனைவியை அழைத்தார்.

பிறகு இருவரும் சேர்ந்து பீட்ரூட்டைக் கயிற்றால் கட்டி இழுத்தனர்.

அது அசைந்து கொடுக்கவில்லை.

சற்று நேரத்தில் அங்கு வந்த அவரது மகன் சீனுவும் பீட்ரூட்டைப் பறிப்பதற்கு உதவினான். எந்தப் பயனும் இல்லை.

அதன்பின் அவர்களது மகள் சுதாவும் முயற்சி செய்ய அப்போதும் பீட்ரூட் வெளியே வரவில்லை.

இவர்களது சிரமத்தைக் கண்ட அவர்களது செல்லப்பிராணியான நாயும் சேர்ந்துகொண்டு உதவியது. அதனாலும், பறிக்க முடியவில்லை.

அதன்பின் அவர்களது பூனையும் சேர்ந்துகொள்ள, அனைவரும் பலம் கொண்ட வரை பிடித்து இழுக்க, மெல்ல அசைந்து வெளியே வந்தது பீட்ரூட்.

உடனே, "யாராலும் முடியாததை என் செல்லப் பூனை செய்துவிட்டது பார்த்தீர்களா?" என்று சுதா கூறினாள்.

"பீட்ரூட்டைப் பறிப்பதற்கு முக்கிய காரணமே எனது நாய்க்குட்டிதான்," என சீனு சொன்னான்.

உடனே அந்த விவசாயி, "யாரோட தனிப்பட்ட முயற்சியாலும் அல்ல, நம் எல்லோருடைய ஒற்றுமையாலும்தான் பீட்ரூட்டைப் பறிக்க முடிந்தது," என்றார்.

குழந்தைகளே! நீங்களும் இதேமாதிரி ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள்.

நீதி: ஒற்றுமையே பலம்