ஆக்டோபசில் ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. பெரும்பாலும் இவை கடலையும் கடல்பரப்புகளையும் உறைவிடமாகக் கொண்டிருக்கும். நண்டுகள், இறால்களை உணவாகக் கொள்ளும்.
ஆக்டோபஸ் உடலில் மிருதுவான பை போன்ற எட்டு உணர்ச்சி கொடுக்குகள் பரந்திருக்கும். அவை இரண்டு 'கால்கள்', ஆறு 'கைகளாகப்' பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றை இழந்தாலும் அவை மீண்டும் வளர்ந்துவிடும்.
பெரிய பளபளப்பான கண்கள், உறுதியான தாடைகள் கொண்டது. நீண்ட கைகளால் நண்டு, லாப்ஸ்டர் போன்றவற்றைப் பிடித்து தின்றுவிட்டு, சக்கையைத் துப்பிவிடும்.
அதற்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால், ஒருவகை கறுப்பு திரவத்தைப் பீய்ச்சிக்கொண்டு விரைந்து ஓடிவிடும். எதிரி பின்தொடராமல் இருக்கவே இப்படி செய்கிறது.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், ``ஆக்டோபஸ் நீண்டகால மற்றும் குறுகியகால நினைவாற்றல் கொண்டவை," என்று கூறுகின்றனர்.
அவற்றால் மனிதர்களை அடையாளம் காணமுடியுமாம். இவை மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த உயிரினம் என்கின்றனர்.
மெல்லுடலி உயிரினங்களில் இதுவே அதிக மூளை வளர்ச்சி கொண்டது. உணர்ச்சி வசப்படும் போது இதன் நிறம் பழுப்பு, சிவப்பு, நீலம், வெள்ளை என்று பலவித வண்ணங்களில் மாறும். பச்சோந்தியைப் போலவே சூழ்நிலைக்கேற்ப இதுவும் தன் நிறத்தை மாற்றும் தன்மை கொண்டது என்கின்றனர்.

