நியூயார்க்: தைவானிய துணை அதிபர் வில்லியம் லாய், இடைவழிப் பயணமாக சனிக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தரை இறங்கினார்.
உடனேயே சீனா அதைக் கண்டித்தது.
இதனிடையே, தைவானிய துணை அதிபர், பராகுவே செல்லும் வழியில் இடைவழிப் பயணமாக அமெரிக்காவில் தரை இறங்கிய சம்பவம் பிரச்சினையை உருவாக்கும் என்று தைவான் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தைவானிய துணை அதிபர் அமெரிக்காவில் காலடி வைத்ததை எதிர்த்து, தைவான் தீவைச் சுற்றிலும் ராணுவ நடவடிக்கைகளை அதிகமாக்கி சீனா பயமுறுத்தும், மிரட்டும் என்று தைவான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பராகுவே அதிபர் அடுத்த வாரம் பதவி ஏற்கிறார். அதில் கலந்துகொள்ள அந்த நாட்டுக்குத் தைவானிய துணை அதிபர் செல்கிறார்.
போகும்போதும் திரும்பி வரும்போதும் அவர் இடைவழிப் பயணமாக அமெரிக்காவில் தரை இறங்குகிறார்.
தான் அமெரிக்காவில் தரை இறங்கி இருப்பதாக எக்ஸ் திரு லாய் ஊடகத்தில் தெரிவித்தார்.
அவர் அமெரிக்காவில் தரை இறங்கியதற்குச் சில மணி நேரத்தில் சீனாவின் வெளியுறவு அமைச்சு அந்தப் பயணத்தைக் கண்டித்தது.
தொடர்புடைய செய்திகள்
திரு லாய் பிரவினைவாதி, பிரச்சினையான பேர்வழி என்று அவரை சீனா சாடியது. எல்லாவற்றையும் சீனா அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. இறையாண்மையைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை சீனா எடுக்கும் என்றும் பெய்ஜிங் குறிப்பிட்டுள்ளது.
தைவான் தனக்குச் சொந்தமான ஒரு மாநிலம் என்றும் தன்னிடமிருந்து பிரிந்து செல்ல அது முயல்கிறது என்றும் சீனா சொல்கிறது. தைவானுடன் எந்த நாடும் அரசதந்திர உறவுகளை வைத்துக் கெள்ளக்கூடாது என்று அது உலக நாடுகளை மிரட்டி வருகிறது.