மும்பை: உடற்பிடிப்பு நிலையத்தில் வாடிக்கையாளர்களிடம் துப்பாக்கி முனையில் பணம், விலையுயர்ந்த கைப்பேசி, தங்கச் சங்கிலி பறித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிலேஜ் சரோஜ் (வயது 24) என்பவர் புதிதாக, வக்கோலா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஓர் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, உடற்பிடிப்பு நிலையம் நடத்தி வருவதாகக் கூறி தொழிலதிபர்கள் சிலரை அங்கு வரவழைத்திருக்கிறார்.
அவ்வாறு அங்கு வந்த 45 வயது வைர வியாபாரி ஒருவரிடம், நிலேஜ் சரோஜும் அவரது நண்பர்களும் சேர்ந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.95 ஆயிரம் பணம் பறித்தனர். இது தொடர்பாக அந்த வியாபாரி காவல்துறையில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், நிலேஜ் சரோஜையும் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டா மற்றும் 9 கைப்பேசிகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்தக் கும்பல் குறைந்தது ஐந்து பேரிடம் இதே பாணியில் பணம் பறித்தது தெரியவந்து உள்ளது.