ஊசலாடும் பொம்மலாட்டம்; உயிர் கொடுக்கும் கலைமாமணி

4 mins read

சனிக்கிழமை

ஒரு சாமானியர்

பொம்­ம­லாட்­டக் கலை மிகப் பழைமை­யானது. மரப்­பாவைக்­கலை, தோல்­பாவைக் கலை என்று அது இரு வகைப்­படும். தோல்­பாவை என்­பது விலங்கு தோலால் ஆன உருவத்தைக் கொண்டு விளக்கு ஒளியுடன் திரை­யில் நிழல் விழ­வைத்து நடத்­தப்­படும் கலை. அது நிழ­லாட்­­டம் என்­றும் குறிப்­பி­டப்­படும்.

'இந்­தி­யன்' திரைப்­ப­டத்­தில் நடிகை சுகன்யா நடத்­தும் பொம்­ம­லாட்­டத்தை நீங்­கள் பார்த்து இருக்­க­லாம்.

அந்­தக் காட்­சிக்குச் சொந்தக்காரர் மயி­லா­டு­துறை­யைச் சேர்ந்த கலை­மாமணி எம். சோம­சுந்­த­ரம், 63. இவர் பரம்­பரை பொம்­ம­லாட்டக் கலை­ஞர்.

"ஸ்ரீ கண­நா­தர் பொம்மை நாடக சபா' என்ற நிறு­வ­னத்தை நடத்தி வரு­ப­வர். இவ­ரின் குழுவில் மொத்­தம் 12 பேர், எல்­லா­ருமே 50 வய­தைக் கடந்­த­வர்­கள்.

"என் தந்­தை­ திரு ஏ.எஸ். மாணிக்­க­வா­ச­கம், அவ­ரின் தாய் மாமா­வி­டம் இருந்து இந்­தக் கலையைக் கற்­றார். நான் என் தந்­தை­யி­டம் இருந்து பொம்­ம­லாட்­ட­த்தைக் கற்­றுக்­கொண்­டேன்.

"எனக்கு இரு மகள்­கள். இரு மகன்­கள். என் மகன்­கள் இரண்டு பேருமே தக­வல் தொழில்­நுட்­பம், பொறி­யி­யல் படித்­த­வர்­கள் என்­றாலும் எனக்­குப் பிற­கும் பொம்­ம­லாட்­டக்­கலை தொடர வேண்­டும் என்­ப­தால் அவர்­களை இந்­தத் தொழி­லில் ஈடு­படுத்தி வரு­கி­றேன்.

"என் தலை­மை­யில் செயல்­படும் பொம்மை நாடக சபா­ கலை­ஞர்­கள் எல்­லா­ருமே சக­ல­கலா வல்­ல­வர்­கள்.

"பாடு­வது, பேசு­வது, பொம்­மையை ஆட்­டு­விப்­பது, பல­ருக்­கும் தெரி­யும். ராஜேந்­தி­ரன் என்ற முதி­ய­வர் பொம்மை­களைக் கதைக்கு, காட்­சிக்கு ஏற்ப நடிக்க வைப்­ப­தில் கைதேர்ந்த கலை­ஞர்.

"மொத்­தம் 46 கதை­கள் உள்­ளன. சரித்­திரக் கதை­கள், சமூ­கக் கதை­கள், புரா­ணக் கதை­கள், தெய்­வீ­கக் கதை­கள் எல்­லாம் உண்டு.

"உட­ன­டி­யாக ஒரு கதையை, காட்­சி­களை அமைத்து, கதைக்கு ஏற்ற உடுப்பு­களுடன் 3 மணி நேரத்­தில் தயாராகி­விடு­வோம். உள்­ளூர்ப் பகு­தி­களில் நிகழ்ச்சி நடத்த ரூ.10,000 வரை கேட்­போம். வெளி­யூர் என்­றால் போக்கு­வ­ரத்­துச் செலவு, தங்கு­மிடச் செலவு எல்­லாம் தனி.

"பொம்­மை­கள் எடை குறை­வாக இருக்க வேண்­டும் என்­ப­தால் கல்­யாண முருங்கை, அத்தி மரத்­தில் செய்­வோம்.

"முகம், கை, கால் என ஒவ்­வொரு பகு­தி­யை­யும் தனித்­த­னி­யா­கச் செய்து மெழுகு பூசி, வண்­ணம் தீட்டி கெடாமல் வைத்­துக்­கொள்­வோம். கன­மான நூல் கயிற்­றால் பொம்­மை­யின் எல்லா பகுதி­களை­யும் சேர்த்­துக் கோத்து கட்டி இணைத்­துக்கொள்­வோம். நாட­கத்­திற்கு ஏற்ப சோடித்து தயார் செய்­வோம்.

"கையில் ஓரடி நீள குச்­சி­யில் பொம்மை­யின் கயிறு கட்டி இருக்­கும். அந்­தக் குச்­சியை ஆட்டி அசைத்து இழுத்து, தளர்த்தி பொம்­மையை நடிக்க வைப்­போம்," என்றார் திரு சுந்­த­ரம்.

"சென்ற நூற்­றாண்­டில், 1971 ஆம் ஆண்­டில் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் நடந்த அகில இந்­திய பொம்­ம­லாட்ட விழா­வில் என் தந்தை திரு மாணிக்­க­வாசகம் தலை­மை­யி­லான குழு­வில் நானும் இடம்­பெற்று இருந்­தேன்.

"அரிச்­சந்­திரா பொம்­ம­லாட்ட நாட­கத்தை நடத்தி என் தந்தை வெள்­ளிக் கோப்­பையை பரி­சா­கப் பெற்­றார்," என்று கூறிய திரு சுந்­த­ரம், திரு மாணிக்­க­வா­ச­கம் கோப்­பை­யு­டன் இருக்­கும் ஒரு படத்­தைக் காட்­டி­னார்.

திரு சுந்­த­ரம், தந்­தைக்­குப் பிறகு, 1986ஆம் ஆண்­டில் ஜெர்­ம­னி­யில் நடந்த அகில உலக பொம்­ம­லாட்ட விழா­வில் கலந்­து­கொண்டு, அந்த நாட்­டில் 15 இடங்­களில் நிகழ்ச்­சி­களை நடத்தி பாராட்­டு­, பரிசு, விரு­து­களைப் பெற்­ற­வர். பொம்­ம­லாட்­டக் கலைக்கு இவர் ஆற்­றி­வ­ரும் சேவை­களை, தொண்டு­களைப் பாராட்டி 2015ஆம் ஆண்­டில் 'கலை­மா­மணி' விருது வழங்கி தமி­ழக அரசு இவ­ரைச் சிறப்­பித்­தது.

"தமி­ழக அர­சுக்­குச் சொந்­த­மான தமிழ்­நாடு இயல், இசை, நாடக மன்­றம், நலிந்த கலை­ஞர்­க­ளுக்கு மாதா­மா­தம் ரூ.3,000 உத­வித்­தொகை வழங்­கு­கிறது.

"என் குழு­வில் இருக்­கும் சிலர் இந்தத் தொகையை மாதா­மா­தம் பெறு­கிறார்­கள். நான் இனி­மேல்­தான் விண்­ணப்­பிக்க வேண்­டும். எங்­க­ளைப் போன்ற கலை­ஞர்­க­ளுக்கு அந்த மன்றத்­தின் கலை பண்­பாட்­டுத்­துறை ஆண்டுக்கு ஒரு பெரிய நிகழ்ச்­சியை நடத்­தும் வாய்ப்பைக் கொடுக்­கிறது.

"அர­சாங்­கத்­தின் சார்­பில் செயல்­படும் நாட்­டுப்­புறக் கலைஞர்­கள் நல­வா­ரி­யம். நலிந்த கலைஞர்­க­ளுக்கு மருத்­து­வச் செலவு, ஈமச்­ச­டங்கு உள்­ளிட்ட உத­வி­களைச் செய்து வரு­கிறது.

"பொம்­ம­லாட்­டக் கலைக்கு மக்­களிடத்­தில் ஆத­ரவு உள்­ளது. ஆனால், நவீன ஊட­கங்­க­ளுக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் பொம்­ம­லாட்­டக் கலை­யும் கலைஞர்­களும் தடு­மா­று­கி­றோம்.

"கிரா­மப் பஞ்­சா­யத்து போன்ற அமைப்பு­கள் பொம்­ம­லாட்­டம் மூலம் தங்­கள் திட்­டங்­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க ஓரிரு வாய்ப்­பு­களை வழங்­கு­கின்றன. என் கலை சபா­வை­யும் சேர்த்து தமிழ்­நாட்­டில் நான்கு, ஐந்து பொம்­ம லாட்டக் குழுக்கள்தான் உள்ளன.

"நிலைமை இப்­ப­டியே போனால் வெகு­வி­ரை­வில் இந்­தக் கலை மறைந்து­வி­டு­வதற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம். இதைக் கற்றுக்கொள்ள இளையர்கள் விரும்புகிறார்கள். ஆனால் வருமானம் இல்லாததால் முன்வருவதில்லை.

"எனக்­குப் பிற­கும் இந்­தக் கலை தொடர வேண்­டும் என்பதால் என் புதல்­வர்­க­ளை­ இதில் ஈடு­ப­டுத்தி வரு­கி­றேன். அவர்­கள் வேலை பார்க்கிறார்­கள். நேரம் கிடைக்­கும்­போது என்­னு­டன் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்வார்கள்.

"மாண­வர்­க­ளுக்கு நன்னெறி­க­ளைப் போதிப்­பது, புதிய தொழில்­நுட்­பங்­க­ளைக் கற்­றுக்­கொ­டுப்­பது போன்­ற­வற்­றுக்கு அர­சாங்­கம் பொம்­ம­லாட்­டக் கலையைப் பயன்­ப­டுத்­த­லாம். இத­னால் நாங்­களும் வாழ்­வோம், கலை­யும் நிலைக்­கும்," என்று கூறி­னார் திரு சுந்­த­ரம்.

அவரிடம் இருந்து நான் விடை­பெற்ற­போது, ஊச­லா­டும் பொம்­ம­லாட்­டக் கலைக்கு உயிர் கொடுத்து நிலைநாட்ட திரு சுந்­த­ரம் போன்­ற­வர்­கள் அரும்­பாடு­படு­கி­றார்­கள் என்ற எண்­ணமே எனக்கு ஏற்­பட்டது. அதை ஆமோ­திப்பதைப் போல அவரின் பொம்மலாட்டப் பொம்மைகள் மேலும் கீழும் தலை­ய­சைத்தன.