(காணொளி) சிறிய கழிவறையில் தன்னைத் துரத்திய சிறுத்தையுடன் பல மணி நேரம் சிக்கிக்கொண்ட நாய்

(காணொளி) சிறிய கழிவறையில் தன்னைத் துரத்திய சிறுத்தையுடன் பல மணி நேரம் சிக்கிக்கொண்ட நாய்

2 mins read

தன்னைத் துரத்தி வந்த சிறுத்தையுடன் 3X4 சதுர அடி பரப்பளவிலான கழிவறைக்குள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பல மணி நேரத்தைக் கழித்த பரிதாப நிலைக்கு உள்ளான பொல்லு என்ற நாய் இப்போது அந்தப் பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.

கர்நாடகாவின் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பிலினெலி கிராமத்தில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் நடந்தது.

வீட்டு உரிமையாளரான ஜெயலட்சுமி என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியூருக்குச் சென்று விட்டார்.

Watch on YouTube

அன்றிரவு அந்த வீட்டு நாயை அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று இரையாக்கிக்கொள்ளத் துரத்தியது. சிறுத்தையிடமிருந்து தப்ப எண்ணி வீட்டுக்குள் ஓடிய நாயை சிறுத்தை தொடர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வீட்டின் கழிவறை ஒன்றுக்குள் நுழைந்த நாயைத் தொடர்ந்து சிறுத்தையும் புகுந்தது.

சிறுத்தையின் வாலை கழிவறைக்குள் கண்ட அந்த வீட்டுப் பெண் ஒருவர், நேற்று அதிகாலை வேளையில் கழிவறையை வெளியிலிருந்து பூட்டிவிட்டார். பின்னர் வன அலுவலர்களிடம் தெரிவிக்கச் சென்றுவிட்டார் அவர்.

அந்தச் சிறிய இடத்தில் ஒரு மூலையில் சிறுத்தையும் மறு மூலையில், எப்போது கதவு திறக்கப்படும் என்ற ஏக்கத்தில் மாங்ரில் இன நாயும் இடம்பிடித்தன.

இந்த இக்கட்டான சூழலிலேயே அவை பல மணி நேரம் அங்கிருந்தன. சிறுத்தையைப் பிடிக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால், நேற்று பிற்பகல் 1.40 மணியளவில் கூரை வழியாக வெளியேறியது சிறுத்தை.

அதிர்ஷ்டக்கார நாயை அதன் உரிமயாளர் கழிவறையிலிருந்து விடுவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளியும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவின.

குறிப்புச் சொற்கள்