இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேமண்ட் ரஃபேல்-சோஜா தம்பதிக்கு கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
ஜோப்ரெட் வர்கீஸ் கிரெகரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரெகரி என பெயர் கொண்ட அந்த 24 வயது சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்துவிட்டு ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ஒரே நாளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் மே 13, 14ஆம் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மகன்களின் மரணம் குறித்து தந்தை ரஃபேல் கருத்து கூறுகையில், "எனது மகன்கள் எங்களுக்காக நிறைய திட்டங்கள் வைத்திருந்தனர். எங்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையை வழங்க விரும்பினர். ஆசிரியர்களான நானும் எனது மனைவியும் பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர அரும்பாடுபட்டோம். எங்களுக்காக திருப்பிச் செய்ய எனது மகன்கள் விரும்பினர். அவர்கள் இறப்பதற்கு முன்பு, வேலைக்காக கொரியாவுக்கும் பின்னர் ஜெர்மனிக்கும் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். எங்களை கடவுள் ஏன் இப்படி தண்டித்துவிட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை," என்று உருக்கமாகக் கூறினார்.
ரஃபேல்-சோஜா தம்பதிக்கு நெல்ஃபிரட் எனும் மூத்த மகன் உள்ளார்.

