புதுடெல்லி: நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளுமே மிகச்சிறப்பானவை என்று கூற இயலாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டுக்காக வடிவமைத்த பல்வேறு அமைப்புகளில் நீதித்துறையில் உள்ள கொலிஜியம்தான் மிகச் சிறந்த அமைப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல ஆங்கில ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, வெளிப்புற தாக்கத்தில் இருந்து நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
"நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவே கொலிஜியம் அமைப்பு உருவாக்கப்பட்டது. அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை," என்றார் நீதிபதி சந்திரசூட்.
கொலிஜியம் அமைப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இத்தகைய சூழலில் அந்த அமைப்பின் முக்கியத்துவம் குறித்து தலைமை நீதிபதி சந்திரசூட் பேசி இருப்பது கவனிக்கத்தக்கது.
கொலிஜியம் அமைப்பின் மீது வெளிப்புற தாக்கங்கள் உள்ளதாக அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பது நாடு தழுவிய அளவில் புது விவாதங்களை எழுப்பி உள்ளது.

