ராய்ப்பூர்: திருமணத்திற்கு மறுத்த 16 வயதுப் பெண்ணை ஆயுதத்தால் தாக்கி, அவரது முடியைப் பிடித்தபடி நடுச்சாலையில் இழுத்துச் சென்ற 47 வயது ஆடவரை இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு நேரத்தில் நடந்தது.
இதுதொடர்பான காணொளி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து, உள்ளூர்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி, இருவரையும் அடையாளம் கண்டனர்.
ஓம்கார் திவாரி (அ) மனோஜ் என்ற அந்த ஆடவரின் கடையில் அந்த இளம்பெண் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வேலையைவிட்டு நின்றுவிடுவதாக அந்த இளம்பெண் கூறியதாலும் வேறு சில பிரச்சினைகளாலும் ஆத்திரமடைந்த மனோஜ், அவரைத் தாக்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்த இளம்பெண்ணை மணந்துகொள்ள மனோஜ் விரும்பியதாகவும் அதற்கு அப்பெண்ணும் அவளின் தாயாரும் உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மனோஜ் கூரிய ஆயுதம் கொண்டு தாக்கியதால் உடலில் பல இடங்களில் காயமடைந்த அந்த இளம்பெண், மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

