உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவின் கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள பானூர் பகுதியில் பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆதரவாக அவருடைய ரசிகர்கள் போர்ச்சுகல் தேசியக் கொடியைச் சாலையோரம் வைத்திருந்தனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, நள்ளிரவு நேரத்தில் ஒருவர் அந்தக் கொடியைக் கிழித்து வீசினார். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி உள்ளது. போர்ச்சுகல் கொடியைக் கிழித்த அந்த ஆடவர், பாஜக ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
எஸ்டிபிஐ அரசியல் கட்சியின் கொடி என்று தவறாக நினைத்து அவர் போர்ச்சுகல் கொடியைக் கிழித்துவிட்டார். 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா' (எஸ்டிபிஐ) என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பால் தொடங்கப்பட்டதாகும்.
இச்சம்பவம் பானூரில் செவ்வாய்க்கிழமை நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவர் போதையில் இந்தச் செயலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
"காவல்துறையினர் மேலும் கூறுகையில், "அவர் பாஜகவின் தொண்டர் இல்லை. பாஜக ஆதரவாளர் மட்டுமே. இதற்கு முன்பு அவர் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தியதாக காவல்துறை ஆவணங்களில் தகவல் எதுவும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட பிற நாட்டுக் கொடிகளையும் அங்கு ரசிகர்கள் ஏற்றி இருந்தனர். இருப்பினும், அந்த ஆடவர் போர்ச்சுகல் கொடியை மட்டுமே எஸ்டிபிஐ கொடி என்று நினைத்து கொடியைக் கீழே இறக்கிக் கிழித்தார்.
கைது செய்யப்பட்ட பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து பாஜக தரப்பில் விளக்கம் தரப்படவில்லை.