'இந்தியா தனது வளர்ச்சி அனுபவங்களை எப்போதுமே பகிர்ந்து வந்துள்ளது'
புதுடெல்லி: உலகின் தெற்குப் பகுதி நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனினும் இந்தச் சவால்கள் அந்நாடுகளால் உருவாக்கப்படவில்லை என்றும் பாதிப்புகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, போர், பயங்கரவாதம், புவியியல் பதற்றம், உணவு, உரம், எரிபொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு சவால்கள் நிறைந்த கடினமான ஆண்டை உலக நாடுகள் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"உலக மக்கள்தொகையின் நான்கில் மூன்று பங்கினர் உலகின் தெற்குப்பகுதி நாடுகளில்தான் வசிக்கின்றனர். எதிர்காலத்தில் தெற்கு நாடுகள்தான் உலகில் அதிக பங்களிப்பைத் தரப்போகின்றன.
"இந்தியா தனது வளர்ச்சி அனுபவங்களை எப்போதுமே தெற்கு நாடுகளுடன் பகிர்ந்து வந்துள்ளது. நமது கூட்டு வளர்ச்சி என்பது அனைத்து புவியியல், பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகும்," என்றார் பிரதமர் மோடி.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது, அங்கீகரிப்பது, மதிப்பளிப்பது தொடர்பில் உலகளாவிய கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தெற்கு நாடுகளில் உள்ள குடிமக்களின் நலன்கள் உறுதி செய்யப்பட்டு ஒரு புதிய உலக நாடுகளின் வரிசை உருவாக்கப்படும் என்றார்.
தென்பகுதியில் அமைந்த நாடுகள் கூட்டாக இணைந்து தங்களது நோக்கங்கள், இதர முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் குறித்து பொதுத்தளம் ஒன்றில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இம்மாநாட்டின் மூலம் அமைந்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.
ஒரே குரல், ஒரே நோக்கம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த உச்சநிலை மாநாடு நடைபெற்றது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்ற பின்னர் நடைபெறும் மாநாடு என்ற வகையில் இம்மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுக்கும்'
இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் நடைபெற்ற அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது ஆகப்பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுக்கும் என்றார்.
அனைத்துலக அளவிலான பொருளியல் நெருக்கடிகளை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது என்று உலக வங்கி பாராட்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"ஜி 20 அமைப்பில் அதிவேகமாக வளரும் பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் என்று பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) கணித்துள்ளது.
"உலகப் பொருளியல் தளத்தில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ளது என்று அனைத்துலக செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது," என்றார் பிரதமர் மோடி.
தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட அவர், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இருந்த தடைகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு 50,000 அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

