ஜம்மு: இந்திய எல்லையில் உள்ள நிலத்தை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இதுவரை சீன ராணுவம் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்திய அரசோ, எதுவுமே நடக்காதது போல் அமைதி காக்கிறது. இது மிகவும் ஆபத்தான செயல் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மண்ணில் சீனர்களை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்தியக் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக் காவல் பகுதிகள்கூட இப்போது சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது என்று லடாக் குழு தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "சீனா, இந்திய மண்ணில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பது மிகவும் ஆபத்தானது," என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்திக்குப் பதிலளிக்கும் வகையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "உண்மையில் சீன ஆக்கிரமிப்பு காங்கிரஸ் ஆட்சி செய்த 1962லேயே தொடங்கிவிட்டது" என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவின் செயலாளரும், மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், "சீனா குறித்த கொள்கை விவகாரத்தில் மோடி அரசாங்கத்தின் தோல்வியை மறைத்து திசைதிருப்பும் ஒரு முயற்சியே இது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் லடாகில் உள்ள 65 கண்காணிப்பு மையங்களில், 26 மையங்களை கையாளும் உரிமையை இந்தியா இழந்துள்ளது," என்று கூறியுள்ளார். இந்நிலையில், லடாக் எல்லையில் ரூ.400 கோடி செலவில் டெம்சாக் - சூசோல் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் இது பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

