ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவோ தனிப்பட்ட காரணங்களுக்காகவோ தாம் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொள்ளவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே தாம் பயணம் மேற்கொண்டதாக அவர் கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்ட ஒற்றுமை நடைப்பயணம் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. நிறைவு நிகழ்வை முன்னிட்டு ராகுல் தலைமையில் நடைபெற்ற பேரணியில் திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
"இந்தியாவின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்துக்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே இந்த நடைப்பயணத்தின் நோக்கம்.
"எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டபோது, தொலைபேசி மூலம் என்னிடம் அந்தத் தகவலை தெரிவித்தனர். ஒருவருக்கு அதுபோன்ற தொலைபேசி அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீர் மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்," என்றார் ராகுல்.
மொத்தமாக 137 நாட்களில் 3,800 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்துள்ளார் ராகுல். அப்போது பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்துப் பேசி, அவர்களின் குறைகளைக் கேட்டறிய முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். கொட்டும் பனிக்கு மத்தியில் நடைப்பயண நிறைவு விழா நடைபெற்றது.

