ரூ.1.42 கோடி கடன் மோசடி: வங்கி நிர்வாகிக்கு விதித்த 2 ஆண்டு சிறைத் தண்டனை ரத்து

2 mins read
fbee0f25-0f2d-492a-9a37-7c9394fe1572
ரூ. 1.42 கோடி கடன் மோசடி வழக்கில் திடீர் திருப்பமாக தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணு வர்த்தன் கிரானைட்ஸ் நிறுவனம், அதன் பங்குதாரரான ராம கிருஷ்ண பிரசாத், வங்கி தலைமை மேலாளர் சுப்புராமன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1.55 கோடி அபராதம் விதித்தும் கடந்த 2012ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி வங்கியின் தலைமை மேலாளர் சுப்புராமனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து ராமகிருஷ்ண பிரசாத், சுப்புராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

உயர் நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு குற்றச் சதி, ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்ததுடன், மற்ற பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

அத்துடன் சிபிஐ நீதிமன்றம் விதித்த ரூ.1.55 கோடி அபராதத்தை உறுதி செய்த நீதிபதி, அந்தத் தொகையை இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

வங்கித் தலைமை மேலாளர் சுப்புராமன், மண்டல அலுவலகம் வாய்மொழியாக தெரிவித்த ஒப்புதலின் காரணமாகவே கடன் கொடுத்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிகாதல்தண்டனை

தொடர்புடைய செய்திகள்