இந்திய உள்நாட்டு விமானங்களில் மே மாதம் 1.53 கோடி பேர் பயணம்

இந்திய உள்நாட்டு விமானங்களில் மே மாதம் 1.53 கோடி பேர் பயணம்

1 mins read
25297db8-03b0-477e-9093-454b3ffd5bbe
குறித்த நேரத்திற்குச் சேவையாற்றிய விமான நிறுவனங்களின் பட்டியலில் ஏர் இந்தியா மூன்றாம் இடத்திற்கு வந்தது. - கோப்புப் படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் கடந்த மே மாதம் 1.53 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதப் பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் அது 11 விழுக்காடு அதிகம். ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குள் விமானப் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 1.38 கோடி.

2025 மே மாதத்துடன் ஒப்புநோக்க, இந்த மே மாதப் பயணிகளின் எண்ணிக்கை 9.49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இந்தியாவின் விமானப் போக்குவரத்துப் பொது இயக்குநர் (டிஜிசிஏ) அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாதங்களில் இந்திய உள்நாட்டு விமானங்களில் 7.29 கோடி பேர் பயணம் செய்தததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பயணம் செய்த 7.16 கோடி பேரைக் காட்டிலும் இது 1.91 விழுக்காடு அதிகம்.

இந்தியாவின் 10 பெரிய விமான நிறுவனங்களில் இந்த ஐந்து மாதங்களில் குறித்த நேரத்திற்குச் சேவையாற்றிய விமான நிறுவனங்களின் பட்டியலின் முதலிடத்தில் இண்டிகோ உள்ளது. அது அந்தச் செயல்பாட்டில் 82.8 புள்ளிகளைப் பெற்றது.

ஆகாஷா ஏர் நிறுவனம் 78.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் ஏர் இந்தியா 74.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. ஆகக் குறைந்த 26.5 புள்ளிகளைப் பெற்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஐந்தாம் இடத்தில் இருந்ததாக டிஜிசிஏ தரவுகள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்