2025ல் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு

2025ல் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு

2 mins read
882942e5-d1a7-4fdc-9a50-3132f8f8999e
பெங்களூரில் போக்குவரத்துச் சந்திப்பில் காத்திருக்கும் வாகனவோட்டிகள். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2025ல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1.8 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது, நாளொன்றுக்குச் சராசரியாக 502 மரணங்களைக் குறிக்கிறது. இந்திய அரசாங்கம் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான ஆக அதிக எண்ணிக்கை இதுவாகும்.

இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சு வியாழக்கிழமை (ஜூலை 23) நாடாளுமன்ற மக்களவையில் இத்தகவல்களைச் சமர்ப்பித்தது. அதன்படி, 2025ல் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 5.3 விழுக்காடு உயர்ந்து 5.1 லட்சத்தைத் தாண்டியது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3.5 விழுக்காடு அதிகரித்தது.

உத்தரப் பிரதேசத்தில் ஆக அதிகமாக உயிரிழப்புகள் பதிவாகின. அங்கு மரணங்கள் 24,118லிருந்து 27,550ஆக உயர்ந்தன. அதேவேளையில், பஞ்சாப்பில் உயிரிழப்புகள் 4,759லிருந்து 3,062 எனக் கணிசமாகக் குறைந்தன.

நாட்டின் 18 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மரணங்கள் அதிகரித்தன. 17 மாநிலங்களில் அவை குறைந்தன. லட்சத்தீவில் கடந்த ஈராண்டுகளாக விபத்துகளில் மரணம் எதுவும் பதிவாகவில்லை.

இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நிகழும் 6,358 ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் ஆக அதிகமாக 958 பகுதிகள் உள்ளன. உத்தரப் பிரதேசம் 671 பகுதிகளுடன் இரண்டாமிடத்திலும் கர்நாடகா 607 பகுதிகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. மாவட்ட அளவில், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் ஆக அதிகமாக 70 ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளையும் தாண்டி மரணங்கள் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்போதைய உத்திகள் போதுமான பலனைத் தரவில்லை என்பதையே இது காட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

விபத்துகளைக் குறைக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் பொறியியல் சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
விபத்துஇந்தியாஉயிரிழப்பு