புதுடெல்லி: கடந்த 13 ஆண்டுகளில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தங்களின் குடியுரிமையை விட்டுக்கொடுத்திருப்பது அந்நாட்டு அரசாங்கப் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
அவர்கள் இந்தியக் குடியுரிமைக்குப் பதிலாக மற்ற 135 நாடுகளின் குடியுரிமைக்கு மாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்களைக் கொண்ட புள்ளி விவரங்கள் நாடாளுமன்ற மேலவையில் வெளியிடப்பட்டன என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்தவர்கள் பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஃபிஜி, நமிபியா, நேப்பாளம் போன்ற நாடுகளின் குடியுரிமைக்கு மாறிக்கொண்டனர். அந்த நாடுகள், வளர்ச்சி, உலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் ஆகியவற்றில் இந்தியாவைவிட பின்தங்கியவை.
மற்றபடி அமெரிக்கா, கனடா, சீனா, எகிப்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சூடான், சுவிட்சர்லாந்து, டிரினிடாட் & டொபேகோ, பிரிட்டன், துருக்கி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையையும் இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்தவர்கள் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவு விவகார அமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2022ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவில் 225,620 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்தனர். 2023ல் அந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 216,219ஆகப் பதிவானது.
2015லிருந்து 2023ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்து மற்ற நாட்டுக் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக சம்பந்தப்பட்டவர்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்ததாக இந்திய வெளியுறவு விவகார அமைச்சு நாடாளுமன்ற மேலவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தது. மேம்பட்ட வேலை வாய்ப்புகள், மேம்பட்ட வாழ்க்கைத் தரம் போன்ற காரணங்களால் அவர்கள் அவ்வாறு செய்வதாக சில வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காலமான 2020ல்தான் குறைவான எண்ணிக்கையில் 85,256 பேர் மட்டுமே இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்.