புதுடெல்லி: அதிக எண்ணிக்கையில் மரங்களை வெட்டுவது, மனிதரைக் கொல்வதைக் காட்டிலும் கொடியது என்று இந்திய உச்சநீதிமன்றம் கூறியதை அடுத்து, சட்டவிரோதமாக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுள்ளது.
உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவோருக்குத் தயவு வழங்கப்படக்கூடாது என்றும் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
தாஜ் மஹாலைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட ‘தாஜ் டிரப்பீசியம்’ வட்டாரத்தில் 454 மரங்களை வெட்டிய ஷிவ் ஷங்கர் அகர்வால் என்பவரின் மன்னிப்புக் கோரிக்கைகளை நீதிபதிகள் எஸ் ஓகா, உஜ்ஜால் புயான் ஆகியோர் நிராகரித்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், 2015ல் மரம் வெட்டுதல் தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்ட தடையை மீறுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மரங்களும் சட்டமும் அலட்சியப்படுத்தலாகாது என மூத்த வழக்கறிஞர் ஏடிஎன் ராவ் முன்வைத்த நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றது.
சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படும் சம்பவங்களின் தொடர்பில் அபராதம் எப்படி விதிக்கப்படவேண்டும் என்பது குறித்தும் நீதிமன்றம், தனது புதிய உத்தரவின்வழியாக தரநிலைகள் சிலவற்றை விதித்துள்ளது.
“சுற்றுப்புற வழக்குகளில் தயவு வழங்கப்படக் கூடாது. மனிதர் ஒருவரைக் கொல்வதைவிட அதிக எண்ணிக்கையில் மரங்களை வீழ்த்துவது மோசமாகும். வெட்டப்பட்ட 454 மரங்களின் பசுமையைத் திரும்ப மீட்பதற்கு ஏறத்தாழ நூறாண்டுகள் ஆகும்,” என்றது நீதிமன்றம்.

