தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கட்டாயத்தில் ஒரு லட்சம் இந்தியர்கள்

2 mins read
edb499ff-ab55-4039-a00c-32ad10d0ddd5
‘ஹெச்1பி’ விசா வைத்துள்ள பெற்றோருடன் வசிக்கும் இளையர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் இந்தியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயச் சூழல் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, 21 வயதைக் கடந்த ஒரு லட்சம் இந்திய இளையர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபராக, டோனல்ட் டிரம்ப் இரண்டாம் முறை பொறுப்பேற்றுள்ள பின்னர் அந்நாட்டின் குடியுரிமை விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றங்கள் பிறப்பித்த சில உத்தரவுகளும் இந்தியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘ஹெச்1பி’ விசா வைத்துள்ள பெற்றோருடன் வசிக்கும் இளையர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘ஹெச்1பி’ விசாவில் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் குழந்தைகளுக்கு ‘ஹெச்4’ என்ற விசா வழங்கப்படும்.

ஆண்டுதோறும் 65 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை பார்க்க ‘ஹெச்1பி’ விசா வழங்கப்படுகிறது.

அதேபோல் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் மேல்படிப்பை வெற்றிகரமாக முடிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேரும் இந்த ‘ஹெச்1பி’ விசாவைப் பெற தகுதி பெறுகிறார்கள்.

ஆனால், பெற்றோருடன் அமெரிக்கா செல்லும் குழந்தைகள் 21 வயதை எட்டிய பின்னர் அவர்களின் ‘ஹெச்4’ விசா முடிவுக்கு வரும்.

எனினும் அவர்கள் தங்களுக்கென ஒரு வேலையைத் தேட இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்கச் சட்டம் சொல்கிறது.

21 வயதுக்கு மேல் அவர்கள் பெற்றோரைச் சார்ந்திருக்க முடியாது.

இந்நிலையில், வேலை தேடுவதற்கான அவகாசத்தை அளிக்கும் விசாவை வழங்க டெக்சாஸ் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தடை விதித்தது.

இதனால் வேலை கிடைக்காதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க குடியேற்றத் துறை புள்ளி விவரங்களின்படி, 2023 மார்ச் நிலவரப்படி, ஹெச்1பி விசாவில் பணியாற்றும் இந்தியர்களின் 1.34 லட்சம் குழந்தைகள், 21 வயதைத் தாண்டும் நிலையில் இருந்தனர்.

இவர்களில் குறைந்தபட்சம், ஒரு லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலைக்கு ஆட்பட்டுள்ளனர்.

எனவே, கனடா, பிரிட்டன் போன்ற மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறித்து இவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்