தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வி நிறுவனங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு 10% கேளிக்கை வரி: ஆளுநர் ரவி ஒப்புதல்

1 mins read
7554bef0-ce47-4591-b79f-c7eb51ea28d1
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. - படம்: ஊடகம்

சென்னை: கல்விக் குழுமங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு, உள்ளாட்சி அமைப்புகள் 10 விழுக்காடு கேளிக்கை வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்மீது வரி விதிக்கவும் அவற்றை வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கல்வி நிறுவனத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சிகள் எதற்கும் கேளிக்கை வரி விதிக்கவும் வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் இல்லை.

இந்நிலையில், அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின்மீது 10 விழுக்காடு கேளிக்கை வரி விதிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், கேளிக்கை வரிச்சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான மசோதாவை தமிழக சட்டப்பேரவையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார்.

இச்சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இச்சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்