மும்பை: ஈரானால் 2025ஆம் ஆண்டு ஜூலையில் எண்ணெய்க் கொள்கலன் கப்பலிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட இந்தியக் கடலோடிகள் விடுவிக்கப்பட்டதாக இந்தியா கூறியிருக்கிறது.
தொடர்ச்சியான தூதரக முயற்சியால் கடலோடிகள் பத்துப் பேரும் விடுவிக்கப்பட்டதாக இந்தியக் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (மே 26) தெரிவித்தனர்.
ஜாஸ்க் துறைமுகத்திற்கு அருகே இடைமறிக்கப்பட்ட ‘எம்வி ஹார்பர் ஃபீனிக்ஸ்’ என்ற கப்பலில் இருந்த அக்கடலோடிகளை ஈரான் கைதுசெய்து சிறையில் அடைத்தது என்று கப்பல் போக்குவரத்துத் தலைமை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
விடுவிக்கப்பட்ட கடலோடிகள் கூடிய விரைவில் இந்தியாவிற்குத் திரும்பத் தேவையான ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வளைகுடாப் பகுதியில் கள்ளத்தனமாக எரிபொருளை ஏற்றிச்செல்லும் கப்பல்களை இடைமறிப்பதாக ஈரானியப் படைகள் அவ்வப்போது தெரிவிக்கின்றன.
இந்தியா - ஈரான் இடையே நீண்டகாலத் தூதரக மற்றும் எரிசக்தி சார்ந்த உறவுகள் உள்ளன; அதே வேளையில், அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் இந்தியா நெருக்கமாக இருந்து, உறவுச் சமநிலையைப் பேணி வருகிறது.
எனினும், இந்தியக் கடலோடிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது இந்தியா அமைதியான தூதரகக் கொள்கையையே பின்பற்றியது. கடலோடிகள் கைதுசெய்யப்பட்டதைப் பற்றியோ அவர்கள் சென்ற கப்பலைப் பற்றியோ அது அதிகமான விவரங்களைப் பகிரவில்லை.
இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீதான தாக்குதல்களைத் தொடங்கின. அதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதி வர்த்தகம் நடைபெறும் ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உலகின் மூன்றாவது மிகப் பெரிய எண்ணெய்ப் பயனீட்டாளரான இந்தியா, தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் ஏறத்தாழ பாதியை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே பெற்றுவருகிறது.

