அகமதாபாத்: இந்தியா-பாகிஸ்தான் அனைத்துலக எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 10 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இரண்டு நாள் கள அளவிலான ஆய்வுக்காக 20 எல்லைக் கிராமங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த ஆய்வின்போது, அதிகாரிகள் உள்ளூர் மக்களின் வீடுகளிலேயே இரவு தங்கி பாதுகாப்பு நிலைமைகளை நேரடியாக மதிப்பிட உள்ளனர்.
கட்ச், வாவ்-தரத், படான் மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் பணியில் இருக்கும் காவல்துறையினர், கிராம மக்களின் குறைகள், தேவைகளை அதிகாரிகள் நேரில் கேட்டறிவார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நான்கு அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பு தொலைநோக்கையும் அகமதாபாத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்ட வழிகாட்டுதல்களையும் செயல்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
தொழில்நுட்ப அடிப்படையிலான வேலியமைப்புடன் கூடிய விரிவான வட்டார பாதுகாப்புக்கான பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பூபேந்திர பட்டேல் வழிகாட்டுதல், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவியின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் இந்தப் பணி, அனைத்துலக மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, தொலைதூரக் கிராம மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது.
இந்த இரண்டு நாள்களில் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, முகமைகளின் தயார்நிலை, ரோந்து ஏற்பாடுகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு இரவு நேர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
எளிதில் சென்றடைய முடியாத கடைசி எல்லைக் கிராமம் வரையிலும் பாதுகாப்பையும் மக்கள் நலத் திட்டங்களையும் கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் முக்கியமான இலக்காகும்.
