புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) பயணிகள் இருவரிடமிருந்து பத்துக் கிலோ தங்க நாணயங்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இத்தாலியின் மிலான் நகரிலிருந்து அந்த ஆடவர் இருவரும் புதுடெல்லியை வந்தடைந்தனர். 45 மற்றும் 43 வயதான இருவரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.
தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பயணிகளில் எவரும் சந்தேகப்படும்படியாக நடந்துகொள்கின்றனரா என்று சுங்கத்துறை அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்தனர்.
அவ்வகையில், அவ்விரு காஷ்மீர் ஆடவர்களின் பயணப்பைகளும் சோதிக்கப்பட்டதில் வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை. ஆயினும், ‘டிஎஃப்எம்டி’ எனப்படும் உலோக உணர்கருவியுடன் கூடிய கதவு வழியாக அவர்கள் வெளியேறியபோது, அவர்களின் உடலில் உலோகம் இருப்பதை அக்கருவி காட்டியது.
அதனைத் தொடர்ந்து, அவர்களை அதிகாரிகள் சோதித்தபோது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இடைவாரை அவர்கள் அணிந்திருந்ததைக் கண்டனர்.
நெகிழி உறைகளில் தங்க நாணயங்கள் வைக்கப்பட்டு, அவை இடைவாருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்க நாணயங்களின் எடை 10.092 கிலோ என்றும் அவற்றின் மதிப்பு தோராயமாக ரூ.7.8 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, அவ்விரு ஆடவர்களும் சுங்கத்துறை சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

