சென்னை: ஒடிசாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு கஞ்சா விநியோகிக்கும் கட்டமைப்பைத் துடைத்தொழிக்கும் நோக்கில் இரு மாநிலங்களின் கூட்டுப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு காவல்துறைத் தலைவர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டுப் புதன்கிழமை (அக்டோபர் 14) போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான 14 நாள் மோட்டார்சைக்கிள் பேரணியை மெரினா கடற்கரையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
“பல்வேறு இடங்களில் இருந்து போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு தமிழ்நாட்டுக்குள் வருகின்றன. குறிப்பாக, ஒடிசாவிலிருந்து தமிழகத்திற்குக் கஞ்சா கடத்தப்படுகிறது.
“அவற்றைக் கடத்தும் கும்பலையும் கட்டமைப்பையும் ஒடுக்க, டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்துள்ளோம். இந்தக் குழு ஒடிசா மாநிலக் காவல்துறை, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது,” என்றார் அகர்வால்.
இந்த ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்றும் குறிப்பிட்ட டிஜிபி, இருப்பினும் இது போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதை நேரடியாகக் குறிக்கவில்லை என்றார்.
மாறாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட சிறப்புப் படைகளின் தீவிரக் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளையே இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.
மேலும், நடப்பாண்டில் தமிழகத்தில் 23,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் தடுப்பு மற்றும் அமலாக்கப் பிரிவின் இயக்குநர் கே.சங்கர் கூறுகையில், மாநில அரசு 265 கோடி ரூபாய் செலவில் 67 போதைப்பொருள் தடுப்புக் காவல் நிலையங்களை அமைத்துள்ளதாகவும் அவற்றில் 2,500 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் 2029க்குள் போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் விழிப்புணர்வு மோட்டாா்சைக்கிள் பேரணி, மொத்தம் ஆறு மாநிலங்கள் வழியாக 1,810 கி.மீ. தொலைவு சென்ற பின்னர் குஜராத் மாநிலம் எக்டா நகரில் நிறைவடையும்.
