காங்கிரஸ் நிர்வாகிகள் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

1 mins read
c78bef16-d8ef-4712-a452-67905d796f3a
கொல்லப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள். - படம்: இந்து தமிழ் திசை

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஆனால், இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தாங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆயுள் தண்டனை அளித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

கேரளாவின் காசர்கோடு நகரில் கடந்த 2019ல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் அரசியல் பின்புலம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 10 பேருக்கும் சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், தலா ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இதுதவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கே.வி.குன்ஹிராமன் உள்ளிட்ட நால்வருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி, இரண்டு துடிப்பான இளைஞர்களின் உயிரைப் பறிப்பதற்கு வித்திட்டுள்ளது,” எனக் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்