லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்ஸாபூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்; மூவர் படுகாயமடைந்தனர்.
பிரக்யாஜ்-வாரணாசி விரைவுச்சாலையில் அந்த விபத்து நிகழ்ந்தது. மாண்ட அனைவரும் தொழிலாளர்கள் என்பதும் டிராக்டர் தொடர் வண்டியில் அவர்கள் பயணம் செய்தார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உயிரிழந்த அனைவரும் ஆண்கள். அவர்களில் ஒன்பது பேரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒருவர் யார் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விடியற்காலை 1 மணியளவில் தொழிலாளர்கள் பயணம் செய்த டிராக்டர் தொடர்வண்டி மீது, வேகமாக வந்த லாரி ஒன்று மோதியதாக மிர்ஸாபூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அபிநந்தன் தெரிவித்தார்.
வாரணாசியில் பதோஹி என்னும் இடத்தில் கட்டடம் ஒன்றின் மேல்தளக் கட்டுமானப் பணியை முடித்த பின்னர் அந்தத் தொழிலாளர்கள் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது அந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
விரைவுச்சாலையில் கச்வா என்னும் பகுதியில் வேகமாகச் சென்ற லாரி, டிராக்டரின் பின்னால் பயங்கரமாக மோதியதாக அபிநந்தன் குறிப்பிட்டார்.
மாண்ட அனைவரும் மிர்ஸாபூர் வட்டாரக் குடியிருப்பாளர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
படுகாயமடைந்த மூவரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

