பெங்களூரு: சாதி, மத, ஆணவக் கொலைகளைத் தடுக்க கர்நாடக அரசு தனியாகச் சட்டம் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
அண்மைக்காலமாக சாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் தம்பதிகள் கொல்லப்படுவது கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.
அதனைத் தடுப்பது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவிடம் ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதற்கான மசோதாவைத் தயாரிக்குமாறு சட்ட அமைச்சுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
சட்ட அமைச்சு உடனடியாக அதற்கான வேலையில் இறங்கியது. தற்போது மசோதா தயாராகிவிட்டது. அதுபற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, ஒப்புதல் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆணவக் கொலையில் ஈடுபடும் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க மசோதா வலியுறுத்துகிறது.
மேலும், அந்தக் குற்றத்துக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் மசோதா பரிந்துரைக்கிறது.
காதலர்கள் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்த ஆறு மணி நேரத்துக்குள் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வரும் வரவுசெலவுக் கூட்டத் தொடரில் அந்த மசோதா பற்றி விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

