சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரவன் சிங் எனும் சிறுவன் பாகிஸ்தான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய வீரர்களின் களைப்பு தீர அவர்களுக்கு குடிநீர், லஸ்ஸி போன்ற பானங்களை வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளான்.
இதற்காக அந்தச் சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டினார் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங்.
பாகிஸ்தானிய பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வீரர்களின் தாகம் தீர்த்த அந்த 10 வயதுச் சிறுவனுக்கு இந்திய ராணுவம் பரிசளித்து கௌரவித்துள்ளது.
அந்த ராணுவ நடவடிக்கையின்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன், வீரர்களுக்குத் தண்ணீர், பால், லஸ்ஸி உள்ளிட்டவற்றை வழங்கி தாகம் தீர்த்தான்.
இதனால், பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த ஷ்ரவனை நேரில் அழைத்துப் பாராட்டிய மேஜர் ஜெனரல் ரஞ்சித் சிங் அந்தச் சிறுவனுக்கு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினார்.
பின்னர் பேசிய ஷ்ரவன், “நான் பெரியவனானதும் ஒரு ராணுவ வீரனாக வேண்டும்,” என விரும்புவதாகக் கூறினான்.