வினாத்தாள் கசிந்தால் நடவடிக்கை; 10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி அபராதம்

வினாத்தாள் கசிந்தால் நடவடிக்கை; 10 ஆண்டுகள் சிறை, ரூ. 10 கோடி அபராதம்

2 mins read
நீட் சர்ச்சைக்கிடையே வினாத்தாள் கசிவுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கை
f460f656-ee09-4efc-9ef7-ad12b0f81238
வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட காணொளியில், பிரதமர் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில், பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான சட்டத்தை மேலும் கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கான சிறைத்தண்டனை, அபராதம் ஆகிய இரண்டையும் உயர்த்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, 2024ஆம் ஆண்டின் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிகள் தடுப்பு) சட்டத்தில் முக்கியத் திருத்தங்களைக் கொண்டுவர அரசு முயன்று வருகிறது.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை வழங்கி, வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில், சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்குப் புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்படும்.

அத்துடன், வினாத்தாள் கசிவுச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கான சிறைத்தண்டனைக் காலத்தையும் அபராதத் தொகையையும் கணிசமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, வினாத்தாள் கசிவில் தொடர்புடையோர்க்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.10 கோடி வரை அபராதமும் தண்டனைகளாக விதிக்கப்படலாம்.

தற்போதைய சட்டத்தின்படி, வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட கூட்டுச் சதிக் குற்றங்களுக்கு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.

சாத்தியமான குற்றங்கள் குறித்துத் தெரிவிக்கத் தவறும் சேவை நிறுவனங்களுக்கும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தீவிரப் பிரச்சினை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகாமல் தடுக்க உடனடித் தேர்வுகள் நடத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்