பெங்களூரு: வாடிக்கையாளர்களின் ரூ.100 கோடி (S$15.12 மில்லியன்) பணத்தை மோசடி செய்ததாக எழுந்த புகாரின் தொடர்பில் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் 15 இடங்களில் உள்ள வங்கிகளில் அமலாக்கத்துறை வியாழக்கிழமை (ஜூலை 17) சோதனை நடத்தி வருகிறது.
சுஷ்ருதி சௌகார்தா வங்கி, ஷ்ருதி சௌகார்தா வங்கி, ஸ்ரீ லட்சுமி சௌகார்தா வங்கி ஆகிய வங்கிகளில் அம்மோசடி இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வங்கிகளின் நிறுவனர் என். ஸ்ரீநிவாஸ் மூர்த்தியும் அவரின் குடும்பத்தினரும் 15,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வைப்புத்தொகைகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி அவர்கள் ஏமாற்றிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகையைச் செலுத்தியபின், என். ஸ்ரீநிவாஸ் மூர்த்தியும் அவரின் குடும்பத்தினரும் அப்பணத்தைத் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குப் பிணையின்றிக் கடனாக வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
பின்னர் அத்தகைய கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடன்களாக வகைப்படுத்தப்பட்டன.
அவர்கள் பின்னர் அப்பணத்தைக் கொண்டு சொத்துகளை வாங்கிக் குவித்ததாகவும் அவ்வகையில், ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கர்நாடக நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் நலன் பாதுகாப்பு நடத்திய முந்தைய விசாரணைகளின்போது கண்டறியப்படாத 20 விலைமதிப்புமிக்க சொத்துகள் அண்மைய சோதனை நடவடிக்கைகளில் தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் அதிக அளவில் கள்ளப் பணம் நல்ல பணமாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் சொத்துகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
கடந்த 2024 மே 8ஆம் தேதி ஷ்ருதி சௌகார்தா பட்டின சககாரி நியமிதா அமைப்பிற்கும் ஸ்ரீநிவாஸ் மூர்த்தி உட்பட அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான 22 சொத்துகளை முடக்க கர்நாடக அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறையின் அதிரடிச் சோதனைகள் இடம்பெற்றுள்ளன.