திருவனந்தபுரம்: சபரிமலையில் இறை வழிபாடு முடிந்து வெளியேறும் பயணிகளின் வசதிக்காக புதிய பாலம் கட்டப்படவுள்ளது.
சன்னிதானம் - மரக்கூட்டம் வழியில் கட்டப்படவுள்ள அப்பாலத்திற்கு ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி (S$15.2 மில்லியன்) வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சபரிமலைப் பெருந்திட்டக் குழுவும் மாநில அரசும் அச்செலவைப் பகிர்ந்துகொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்னிதானத்தில் பக்தர்கள் அதிக அளவில் குவிவதை அடுத்து, அதனை நிர்வகிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வெளியேற்றுப் பாலம் கட்டப்படவுள்ளது.
இறை வழிபாடு முடிந்து, அன்னதான மண்டபம் அருகிலுள்ள முகப்புகளில் பிரசாதம் பெற்ற பக்தர்கள், இந்த ஒருவழிப் பாலம் வழியாகக் கோவில் வளாகத்தைவிட்டு வெளியேறும்படி வழிகாட்டப்படுவர். இதனால், கோவில் வளாகத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 360 மீட்டர் நீளத்திற்கு அந்தப் பாலம் கட்டப்படும். பாலத்தின் பெரும்பகுதி காட்டுப்பகுதி வழியாகவும் செங்குத்துச் சரிவுப்பாதை வழியாகவும் செல்லும் எனக் கூறப்படுகிறது.
தாங்குதூண்களுடன் கூடிய பாலமா அல்லது தொங்குபாலமா என்பது தொடர்பில் பொறியாளர்கள் இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் கூறப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்த பின்னரே உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனமான ‘டெர்ம்ஸ்’ அதுகுறித்து முடிவெடுக்கும்.
முன்னதாக, வருடாந்தர பாதயாத்திரைப் பருவத்தின்போது பக்தர்கள் எளிதாக வெளியேறுவதற்கென சிறப்புப் பாலம் கட்ட வேண்டும் என உயர்மட்டக் குழு பரிந்துரைத்திருந்தது.
இதனிடையே, பம்பா மலைப்பகுதியிலிருந்து சன்னிதானத்திற்குச் செல்வதற்கு கம்பிவட வண்டிகளை இயக்குவதற்கான திட்டத்தை திருவாங்கூர் தேவசம் வாரியம் அறிவித்துள்ளது.