100 நாள் வேலைத் திட்டம்: பெயர் மாற்றம், ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை விவரம்

2 mins read
3905be29-399c-4550-9008-ee6822d324af
‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா’  திட்டத்தில் வேலை செய்யும் மகளிர். - படம்: சமயம்

புதுடில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) மத்திய அரசு அதிரடியான மாற்றங்களைச் செய்துள்ளது.

அதேவேளையில், இத்திட்டத்தில் மாநில அளவில் நிலவும் நிர்வாகத் தாமதங்களால் கோடிக்கணக்கான ரூபாய் ஊதியம் நிலுவையில் இருப்பதும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இத்திட்டத்தில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இத்திட்டம், இனி ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா’ என்று அழைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாள்களின் எண்ணிக்கை 100லிருந்து 125 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச தினசரி ஊதியம் திருத்தப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ.240-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க, மத்திய ஊரக அமைச்சகத்தின் தரவுகள்படி, மாநில அளவில் ஏற்படும் நிர்வாகத் தாமதங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,340 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் 89 லட்சம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.220 கோடி ஊதியம் நிலுவையில் உள்ளது. ஆந்திராவில் 91 லட்சம் தொழிலாளர்களுக்கு, நாட்டிலேயே அதிகபட்சமாக ரூ.402 கோடி சம்பள பாக்கி உள்ளது.

கேரளாவில் ரூ.340 கோடியும், மத்தியப் பிரதேசத்தில் ரூ.131 கோடியும் நிலுவையில் உள்ளன.

ஆந்திரா, கேரளா, தமிழகம், மத்தியப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் மொத்தம் ரூ.1,095 கோடி பாக்கி உள்ளது.

உத்தரப் பிரதேசம் (ரூ.33 கோடி) மற்றும் ராஜஸ்தான் (ரூ.5 கோடி) ஆகிய மாநிலங்களில் சம்பள பாக்கி குறைவாகவே உள்ளது.

நடப்பு 2025-26 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.86,000 கோடி ஒதுக்கீடு செய்தது. அதில் நவம்பர் இறுதி வரை ரூ.68,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உரிய நேரத்தில் நிதியை ஒதுக்கினாலும், மாநிலங்கள் தொழிலாளர்களின் வருகைப் பதிவேட்டை இணையத்தளத்தில் பதிவேற்றுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பிழைகள் போன்ற நிர்வாகக் காரணங்களாலேயே இந்தச் சம்பள பாக்கி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அறிவிப்பின் மூலம் வேலை நாள்களும் ஊதியமும் உயர்த்தப்பட்டிருப்பது கிராமப்புறப் பொருளியலுக்கு வலுசேர்க்கும்.

அதேவேளையில், மாநில அரசுகள் நிர்வாகச் சிக்கல்களைச் சரிசெய்து, நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்