நர்சிபட்டினம்: ஆடி மாதம் முடிந்ததைத் தொடர்ந்து தாய் வீட்டிலிருந்து மனைவியை அழைத்துச் செல்ல வந்த புது மாப்பிள்ளைக்கு, 100க்கும் மேற்பட்ட பலகாரங்களைப் பரிமாறி, ஒவ்வொரு அடிக்கும் பரிசுகளை வழங்கி மாமியார் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் - கலாவதி தம்பதியரின் மகள் நவ்யா.
அவருக்கும் ஸ்ரீஹர்ஷா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஆடி மாதத்தை முன்னிட்டு நவ்யா தமது தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.
ஆடி முடிந்து ஆவணி தொடங்கியதால், மனைவியை மீண்டும் தம் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக ஸ்ரீஹர்ஷா ஆகஸ்ட் 16ஆம் தேதி தம் பெற்றோருடன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது, புது மாப்பிள்ளையைச் சிறப்பாக வரவேற்கத் திட்டமிட்ட மாமியார் குடும்பத்தினர், அவருக்குத் தடபுடலான வரவேற்பளித்தனர்.
வீட்டின் வாசலில் இருந்து புது மாப்பிள்ளை உள்ளே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பூக்களைத் தூவி வரவேற்றனர். மேலும், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் சிறப்புப் பரிசுகளையும் மாப்பிள்ளைக்கு வழங்கி வியப்பில் ஆழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து, புது மாப்பிள்ளையின் கண்ணைக் கட்டி உணவு மேசைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மேசையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களைக் கண்டு ஸ்ரீஹர்ஷா திக்குமுக்காடிப் போனார். மேசையில் இட்லி, வடை, பூரி, பொங்கல், உப்புமா, இனிப்புகள், கார வகைகள் என 100க்கும் மேற்பட்ட பலகாரங்கள் அடுக்கப்பட்டிருந்தன.


