ஐந்து மாநிலங்களில் 1,000 கார்கள் திருட்டு; 31 கார்கள் பறிமுதல்

ஐந்து மாநிலங்களில் 1,000 கார்கள் திருட்டு; 31 கார்கள் பறிமுதல்

2 mins read
மென்பொருள் பொறியாளர் உட்பட 10 பேர் கொண்ட கும்பல் டெல்லியில் கைது
4c6d7133-60ce-4254-a46d-c8c7a0b6799f
ஐந்து மாநிலங்களில் ஏறக்குறைய 1,000க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி, விற்பனை செய்த கும்பலை டெல்லிக் காவலர்கள் கைது செய்துள்ளனர். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளிலும் நீண்ட நாள்களாக கார் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை டெல்லிப் பிரிவுக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

இந்தக் கும்பல் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் ஏறக்குறைய 1,000க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி, விற்பனை செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தைப் பகிர்ந்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஃபார்ச்சூனர், இன்னோவா, கிரெட்டா உள்ளிட்ட 31 விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டெல்லியின் ரோகிணி, உத்தம் நகர்ப் பகுதிகளில் கார் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவலர்கள் இந்த மாபெரும் மோசடிக் கும்பலைக் கண்டுபிடித்தனர்.

இந்தக் கும்பலின் தலைவனாகப் பஞ்சாபில் பழைய கார் விற்பனை நிறுவனம் நடத்தி வரும் தாமன் தீப் சிங் என்பவர் செயல்பட்டுள்ளார்.

அதிர்ச்சியூட்டும் தகவலாக, இந்தக் கும்பலில் ஒரு மென்பொருள் பொறியாளரும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரும் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களின் செயல்பாட்டு முறை மிகவும் தந்திரமானது. திருடப்பட்ட கார்களின் ‘சேசிஸ்’, இயந்திரங்களின் எண்களை மாற்றி, போலி ஆவணங்கள் மூலம் புதிய பதிவு எண்களைப் பெற்றுள்ளனர்.

பின்னர், பழைய கார் விற்பனை நிலையங்கள்மூலம் இந்தக் கார்களை நல்ல விலைக்கு விற்றுப் பணத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

தற்போது பிடிபட்டுள்ள 31 வாகனங்களைத் தவிர, இந்தக் கும்பலால் விற்கப்பட்ட மீதமுள்ள கிட்டத்தட்ட 1,000 கார்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கும்பலோடு தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்