புதுடெல்லி: கொரோனா கொள்ளை நோய் காலக்கட்டத்தில் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி ரூ.1,000 கோடி சுருட்டியதாக இரு சீனர்கள்மீது மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அத்துறை அதிகாரிகள் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கொவிட்-19 முற்றடைப்புக் காலத்தில் ‘எச்பிஇசட் டோக்கன்ஸ்’ என்ற போலியான கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தி பொதுமக்களிடமிருந்து 1,000 கோடி ரூபாயை மோசடிக்காரர்கள் சுருட்டியுள்ளனர்.
‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மின்னிலக்க நாணயமாகப் பணத்தைப் மாற்றித் தருவதாகவும் அதிக வட்டி தருவதாகவும் கூறி பாதிக்கப்பட்டவர்களை மோசடிப்பேர்வழிகள் ஏமாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டைச் சேர்ந்த இணையக் குற்றக் கும்பல் இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சதித் திட்டத்துக்குச் சீனாவைச் சேர்ந்த வான் ஜுன், லீ அன்மிங் ஆகிய இருவரும் மூளையாகச் செயல்பட்டதாகத் தெரியவந்தது.
தற்போது அவர்கள் இருவர்மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களைத் தவிர்த்து மேலும் 25 தனிநபர்கள், 30 நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

