புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
அங்கு தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் 2024ஆம் ஆண்டு முதல் மாதம் ரூ.1,000 அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் திங்கட்கிழமை (ஜூலை 28) நடந்த இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் ரங்கசாமி பங்கேற்றார்.
இந்தியாவில் முதன்முறையாகப் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆதிதிராவிடருக்கும் பழங்குடியின மக்களுக்கும் 800 சதுர அடி இலவச மனையை அவர் வழங்கினார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் இதுவரையில் 600 சதுரடி அளவில்தான் இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டு வந்தது.
அந்த நிகழ்ச்சியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அவர் சொன்னார்.
புதுவை சட்டமன்றத் தலைவர் ஆர். செல்வம் தொகுதியான மணவெளியில் 236 பேருக்கு இப்பட்டா வழங்கப்பட்டது. மேலும் அந்த மக்கள் வீடு கட்டிக்கொள்ளவதற்கான நிதியுதவியை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தியும் முதல்வர் என்.ரங்கசாமி வழங்கினார்.
2026ஆம் ஆண்டு புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.