ஐந்து ஆண்டுகளில் 1,000 புதிய ரயில்கள் அறிமுகம்: இந்திய ரயில்வே அமைச்சர்

2 mins read
4fc57ff1-5290-4785-8446-a0af7e2e42bf
கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் கூடுதலாக 35,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெர்மனி நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளுக்கு சமமானது ஆகும். - கோப்புப் படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியா முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 1,000க்கும் மேற்பட்ட புதிய ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக அளவிலான ரயில் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே முதன்மை இலக்கு என இந்திய ரயில்வே கூறிவருகிறது.

மேலும், உள்நாட்டில் குறைந்த செலவில் சரக்கு போக்குவரத்துக்குச் சேவையை வழங்க வேண்டும் என்பதும் இந்திய ரயில்வேயின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையாகும்.

இலக்குகளை அடைய உதவும் நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக ஆயிரம் புதிய ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அடுத்து 2027ஆம் ஆண்டு புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

“மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் கூடுதலாக 35,000 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெர்மனி நாட்டின் ஒட்டுமொத்த ரயில் பாதைகளுக்கு சமமானது ஆகும்.

“ஆண்டுதோறும் 30,000 ரயில் வேகன்கள், 1,500 இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயில்வே துறைக்கான முதலீடு ரூ.25 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.2.52 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

“நெடுஞ்சாலைகள் மூலம் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவில் 50% மட்டுமே ரயில்வே துறை கட்டணமாக நிர்ணயிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சரக்கு போக்குவரத்தில் 26%ஆக இருந்த ரயில்வே துறையின் பங்கு இப்போது அதிகரித்துள்ளது.

“பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அம்ரித் பாரத், நமோ பாரத் என்ற பெயர்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன,” என்றார் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

குறிப்புச் சொற்கள்