அசாமில் மனித-யானை மோதலில் 1,000 பேர் உயிரிழப்பு

அசாமில் மனித-யானை மோதலில் 1,000 பேர் உயிரிழப்பு

1 mins read
7c9fc21b-cfb3-42dd-8489-a54c74877ce9
கடந்த பத்து ஆண்டுகளில் இத்தகைய மோதல்கள் காரணமாக அங்கு 1,147 பேர் இறந்துவிட்டனர்.  - கோப்புப் படம்: தினகரன்

கௌஹாத்தி: மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நீடித்துவரும் மோதல்களின்போது அசாம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் இத்தகைய மோதல்கள் காரணமாக அங்கு 1,147 பேர் இறந்துவிட்டனர். அதேபோல் 246 யானைகள் உயிரிழந்துவிட்டதாக கேரளச் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லபாரூவா தெரிவித்துள்ளார்.

அசாம் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் மேலும் பல அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அசாமில் கடந்த 2025ஆம் ஆண்டில், ஆக அதிகமாக 138 பேர் யானைகளால் தாக்கப்பட்டு மாண்டுபோயினர். நடப்பாண்டில் பலி எண்ணிக்கை இதுவரை 53ஆக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

கோல்பாரா வனப்பகுதியில் ஆக அதிகமாக 195 பேரும் தான்சிரி வனப்பகுதியில் 143 பேரும் உயிரிழந்த நிலையில், பக்ஸா, நாகோன், மேற்கு சோனித்பூர், கோலாகாட், கிழக்கு-மேற்கு காமரூப், கிழக்கு கர்பி ஆகிய வனப்பகுதிகளிலும் இத்தகைய மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

இதே காலகட்டத்தில் மின்சாரம் தாக்கியது, ரயில் விபத்துகள், நஞ்சு வைக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் 246 யானைகள் கொல்லப்பட்டன.

ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் 33 யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, வனப்பணியாளர்களின் பாதுகாப்பு, சூரிய சக்தி மின்வேலிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் யானைகளின் உயிரிழப்பை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என அமைச்சர் கவலை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
அசாம்யானைமனிதன்மோதல்உயிரிழப்புசட்டமன்றம்