புதுடெல்லி: இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு தீவிர முயற்சிகளின் பலனாக கடந்த 2014 முதல் வெளிநாட்டு சிறைகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி போன்ற ஊடகங்கள் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெற்றிகரமான முயற்சிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ராஜதந்திர மதிப்பையும் வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பதில் இந்திய அரசின் இடைவிடாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என அந்த அதிகாரிகள் குறிப்பிட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், வெளிநாட்டுச் சிறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான நிகழ்வுகளையும் மேற்குறிப்பிட்ட ஊடகங்கள் பட்டியலிட்டுள்ளன.
அதன்படி கடந்த 2022 முதல் ஐக்கிய அமீரகத்தில் இருந்து 2,783 இந்திய கைதிகளும் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் 2019ல் மேற்கொண்ட இந்திய பயணத்தின்போது 850 இந்திய கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ல் பிரதமர் மோடியின் வருகையின் போது பஹ்ரைன் நாட்டில் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக இலங்கை அரசு கடந்த 2014 முதல் 3,697 இந்திய மீனவர்களை விடுதலை செய்துள்ளது. இதுபோல் பாகிஸ்தான் கடந்த 2014 முதல் 2,638 இந்திய மீனவர்களையும் 71 இந்திய கைதிகளையும் விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.