10 ஆண்டுகளில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 மாவோயிஸ்ட்டுகள்: அதிகாரிகள்

10 ஆண்டுகளில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 மாவோயிஸ்ட்டுகள்: அதிகாரிகள்

2 mins read
d69f6c9e-0676-44c8-a42e-030a7d4953b1
2026 மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சல் கிளர்ச்சியை நாட்டில் முழுமையாக அகற்ற இந்திய அரசாங்கம் இலக்கு வகுத்துள்ளது. - கோப்புப் படம்: சினர்ஜி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000க்கும் அதிகமான மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு போராடுவதை நிறுத்திக்கொண்டதாகவும் அவர்களின் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு தொடர்பான நெருக்குதல்கள், மாவோயிஸ்ட்டுகளுக்கான மறுவாழ்வு முயற்சிகள் ஆகிய காரணங்களால் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் ஈடுபட்டுள்ள நக்சல் கிளர்ச்சிக்குப் (Naxalism) பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நக்சல் கிளர்ச்சியை முற்றிலும் அகற்ற மத்திய உள்துறை அமைச்சு இம்மாதம் 31ஆம் தேதிவரை கெடு நிர்ணயித்துள்ளது.

2025ஆம் ஆண்டு 2,300 மாவோயிஸ்ட்டுகள் போராட்டத்தைக் கைவிட்டனர். இவ்வாண்டு முதல் காலாண்டில் 630க்கும் மேற்பட்டோர் கிளர்ச்சியில் ஈடுபடுவதைக் கைவிட்டு இயல்புவாழ்க்கைக்குச் சென்றனர் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அப்புள்ளிவிவரங்கள் 2014லிருந்து 2026ஆம் ஆண்டு தொடக்கத்துக்கு இடைப்பட்ட காலத்துக்கானவை.

நக்சல் போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் ஒன்றுபட்ட, பலதரப்பட்ட, திட்டவட்டமாக முடிவெடுக்கும் போக்கை பின்பற்றியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை, குறிப்பிட்ட அம்சங்களைக் குறிவைக்காமல் கவனம் சிதறியபடி இருந்த, முன்னைய அரசாங்கங்களின் அணுகுமுறைக்கு மாறானது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்ட முக்கியப் பகுதிகளில் பெரிய அளவில் புதிய சாலைகள் கட்டப்பட்டன. 15,000க்கும் அதிக கிலோமீட்டர் நீளம்கொண்ட சாலைகள் மாவோயிஸ்ட் பகுதிகளில் கட்டப்பட்டன. அவற்றில் 12,250 கிலோமீட்டர் நீளம்கொண்ட சாலைகள் கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே கட்டப்பட்டவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் மிகுந்த அதிகாரத்துடன் செயல்பட்ட இடங்களில் இருக்கும் உயர் பாதுகாப்பு காவல் நிலையங்கள், 10 ஆண்டுகாலத்தில் 66லிருந்து 586க்கு அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஆறு ஆண்டுகளில் 361 புதிய பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் இரவில் தரையிறங்குவதற்கான ஹெலிபேட் தளங்களும் அமைக்கப்பட்டன.

இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள 48 மாவட்டங்களில் மத்திய அரசாங்கம் திறன் வளர்ச்சிக்கான வசதிகளையும் செய்து தந்துள்ளது. உதாரணமாக, ரூபாய் 4.95 பில்லியன் (67.25 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான தொழில்துறைப் பயிற்சிக் கழகங்களைக் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. 61 திறன் மேம்பாட்டு நிலையங்களைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

நக்சல் கட்டமைப்பின் சமூக ரீதியான பொருளியல் வேர்களை அழிக்க அரசாங்கம், கல்வியிலும் உள்கட்டமைப்பிலும் அதிக முதலீடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்