புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அசாம் மாநிலத்தில் 10,000க்கு மேற்பட்ட இளையர்கள் அமைதி ஒப்பந்தங்களால் ஆயுதங்களையும் வன்முறையையும் கைவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் ‘போடோலாந்து மகோத்சவம்’ எனும் இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு நவம்பர் 15, 16ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போடோலாந்து என்பது அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள சுய ஆட்சிப் பகுதியாகும்.
அமைதியை வலுப்படுத்தவும் துடிப்பான ‘போடோ’ சமூகம் உருவாவதற்காகவும் மொழி, இலக்கியம், கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சியாக ‘போடோலாந்து மகோத்சவம்’ நடத்தப்படுகிறது.
பிரதமர் மோடி அதில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் தமது உரையில், “கர்பி அங்லோங் அமைதி ஒப்பந்தம், புரூ-ரியாங் ஒப்பந்தம் மற்றும் என்எல்எப்டி திரிபுரா ஒப்பந்தம் போன்றவை உண்மையாகும் என யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்கமாட்டார்கள். இவை எல்லாம் உங்களால் சாத்தியமானது,” என்று அசாம் இளையர்களைப் பெருமிதத்துடன் பாராட்டினார்.
“காகிதத்தில் மட்டுமே இந்த ஒப்பந்தம் தொடர்ந்து இருந்திருந்தால், மற்றவர்கள் என்னை நம்பியிருக்கவே மாட்டார்கள். ஆனால், இதனை உங்கள் வாழ்வில் நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். போடோ அமைதி ஒப்பந்தம், உங்களுக்கு மட்டும் பலன் ஏற்படுத்தவில்லை. அது, பல அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் திரு மோடி.
மேலும், ஒருகாலத்தில் கைகளில் துப்பாக்கிகளை ஏந்திய இளையர்கள், இப்போது விளையாட்டுத் துறையில் ஈடுபடுவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
போடோலாந்து வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
இதேபோன்று, அசாம் மாநில அரசும் சிறப்பு நிதியை வழங்கியுள்ளது.
போடோலாந்தில் கல்வி, சுகாதாரம், கலாசாரம் தொடர்புடைய உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.700 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டிருப்பதாகத் திரு மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

