சென்னை: தமிழக அரசு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான பொறுப்பேற்றதிலிருந்து சமூக நலத்துறை வழியாக மகளிர், குழந்தைகள், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ‘புதுமைப் பெண்’ உயர்கல்வி உறுதித் திட்டம் மூலம் 2022–-2023 முதல் தொடங்கி இதுவரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கற்கும் 529,728 மாணவிகள் மாதம் ரூ.1,000 பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் மூலம் 2024–-2025 கல்வியாண்டில் தொடங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 392,449 மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் சொன்னார். ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்கள் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 75,000 குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
மேலும், போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

