ராய்ப்பூர்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 2) 103 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்தனர்.
அவர்களில் ரூ.1.06 கோடி (S$153,940) வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த 49 பேர் அடங்குவர்.
மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்த சண்டை நிறுத்தத்தை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்க மறுத்த நிலையில், ஒரே நாளில் இத்தனை பேர் சரணடைந்துள்ளனர்.
அவர்களில் மூத்த தலைவர்களும் கீழ்மட்டப் போராளிகளும் அடங்குவர் என்றும் அவர்கள் 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது.
“சரணடைந்த 103 பேரும் சமூகத்தில் இணைந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு ஏதுவாக, முதற்கட்டமாக அவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். தவறாக வழிநடத்தப்பட்ட அந்த இளையர்கள், மாநிலத்தின் சரணடைதல், மறுவாழ்வுக் கொள்கையின்கீழ் வழங்கப்படும் பலன்களை அறிந்து வியப்படைந்தனர்,” என்று பிஜப்பூர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஜிதேந்திர யாதவ் கூறினார்.
சரணடையும் மாவோயிஸ்ட்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ், அவர்களுக்கு இலவச வீடு, சுகாதாரப் பராமரிப்பு, வேளாண் நிலம் உள்ளிட்ட உதவிகளும் நிதியாதரவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.