புதுடெல்லி: கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,080 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 62 விழுக்காட்டினர் வணிக விமானங்களில் நாடு திரும்பியதாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாகப் பயணங்கள் மேற்கொள்ளும் இந்தியர்களை நாடு கடத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்காவுக்குச் சட்டவிரோத[Ϟ]மாகச் செல்லும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்ததும் அவர்கள் உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவர் என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்
அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து கருத்துரைத்த அவர், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் சரியான நேரத்தில் தங்கள் கல்வித் திட்டங்களில் சேர முடியும் என்றும் நம்புவதாகக் கூறினார்.
“விசாரணை என்பது நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டது என்றாலும், இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்படும் என நம்புகிறோம். இந்திய மாணவர்களின் நலனுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும்,” என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.