சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடந்த 2 மாதங்களில் 10வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) மிரட்டல் வந்தது.
இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடனும் மோப்ப நாய் உதவியுடனும் வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர்.
சோதனையில் எந்தப் பொருளும் சிக்காததை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 10வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
“வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற மிரட்டல் தொடர்ந்து வருகிறது. ஒரே கும்பல்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கை முடுக்கிவிடப்படும். இது போன்ற புரளிகளை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்,” என்று சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தியிருக்கிறார்.

