புதுடெல்லி: இந்தியாவின் அண்டை நாடான பங்ளாதேஷிலிருந்து முறையான ஆவணங்கள் இன்றி பலர் குடியேறுவதாகப் புகார் எழுந்து வருகிறது.
இதையடுத்து, போதைப் பொருள் ஒழிப்பு படையினர், சிறப்புப் பணியாளர் மற்றும் சட்டவிரோத வகையில் குடிபெயர்ந்தவர்களைக் கண்டறியும் குழு உள்ளிட்டோர் சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக நடந்த அமலாக்க நடவடிக்கையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பங்ளாதேஷ் நாட்டை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சிறுவர்கள்.
“கைது செய்யப்பட்ட 11 பேரும் வெளிநாட்டினருக்கான மண்டலப் பதிவு அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணி இனி மேற்கொள்ளப்படும்,” என்று துணை காவல் ஆணையாளர் ரவி குமார் சிங் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் புகுந்து உள்ளூர் ரயில்களில் பயணம் செய்து டெல்லியை அடைந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் முதல் இதுபோன்ற சட்டவிரோதமாக தங்கியுள்ள 28 பங்ளாதேஷ் குடியேறிகள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.