ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ரூ. 11 கோடி ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அந்தப் பணம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (ஒய்எஸ்ஆர்சிபி) ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஆந்திரப் பிரதேச மதுபான ஊழலுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.
மதுபான ஊழல் வழக்கில் கடந்த சில நாள்களாக சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மூத்த ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களின் பங்கு குறித்த முக்கியமான ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த விசாரணையில், விரைவில் மேலும் பல முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்கின்றனர் அதிகாரிகள்.
முன்னதாக, மதுபான வழக்கு தொடர்பாக மிதுன் ரெட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே. தனஞ்சய ரெட்டி, சிறப்புப் பணி அதிகாரி கிருஷ்ண மோகன் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அந்தப் பரபரப்பு அடங்கும் முன்னர் 11 கோடி ரூபாய் அளவுக்குக் கத்தை கத்தையாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.