மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; பலர் பாதிப்பு

மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழப்பு; பலர் பாதிப்பு

படம்: ஏஎஃப்பி

22 Nov 2026 - 1:33 pm

1 mins read

இம்பால்: மணிப்பூர் மாநிலம் சந்தேல் மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 180க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கள்ளச்சாராயம் குடித்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தங்களது வீடுகளிலும் சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலும் மாண்டனர்.

உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானம் சந்தேல் மாவட்டத்தில் தயாரிக்கப்படவில்லை என்றும் அண்டை மாவட்டமான காக்சிங்கில் உள்ள சுக்னு பகுதியிலிருந்து வாங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மரணத்துக்கான துல்லியமான காரணம் மருத்துவ ரீதியாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை கூறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணிப்பூரில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான மதுபானங்களை அருந்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது அருந்திய பிறகு வாந்தி, வயிற்று வலி, தலைவலி, தலைசுற்றல், பார்வை மங்குதல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் நேரம் தாழ்த்தாமல் மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மணிப்பூர் முதல்வர் யும்னாம் கெம்சந்த் சிங், மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நலம் விசாரித்தார்.

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புக்குக் காரணமானோரைக் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சந்தேல் மாவட்டத்தில் மருத்துவக் குழுக்களும் அத்தியாவசிய மருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சிங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்