போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாகச் சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்த அதிகாரிகள், அவர்கள் புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரிக்கும் சாகர் மாவட்ட மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினர்
சனிக்கிழமை (செப்டம்பர் 5) இரவில் கள்ளச்சாராயம் அருந்தியதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த பலருக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் நீல நிறமாக மாறுவது, தசை பிடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுவதாகச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
“எங்கள் அரசு இதுபோன்ற சம்பவங்களைச் சிறிதும் பொறுத்துக்கொள்ளாது. சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதிகாரிகளும் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் மது அருந்தியவர்கள், உடல்நலப் பாதிப்புக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு சாகர் மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஆறு மதுபானக் கடைகளை உள்ளூர் நிர்வாகம் மூடியதுடன், மதுபான மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பியுள்ளது. சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


